‘திருப்பம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘திடீர் திருப்பம்’ என்றுகூட கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘குபீர் திருப்பம்’ இது! ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்றுவரை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த ஆ.ராசா தரப்பு, இன்று திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றியிருப்பதன் பெயர்தான், குபீர் திருப்பம்!
இன்று சி.பி.ஐ. தனிகோர்ட்டில் ஆஜராகிய ஆ.ராசாவின் வக்கீல் சுசீல்குமார், “அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட வேண்டியது அவசியமில்லை என்று எனது கட்சிக்காரர் கருதுகிறார்” என்றார்.
சி.பி.ஐ. தனி கோர்ட்டில் தினமும் நடைபெற்றுவரும் வழக்கு இது. இருந்த போதிலும், கடந்த சில தினங்களாக பார்வையாளர்கள் முன்பை விட கூர்மையாக கவனம் செலுத்த தொடங்கியிருந்தார்கள். காரணம், அமைச்சர் சிதம்பரத்தில் பெயர் வழக்கில் கண்ணாமூச்சி காட்டத் தொடங்கியிருந்தது.
தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, சில வாரங்களுக்கு முன்னர்தான், இந்த வழக்கில் முதலில் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் பெயரை உச்சரித்தார்.
“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தெரியும். நான் என்ன செய்யப் போகின்றேன் என்பதை அவர் அறிந்திருந்தார். இது தவறு என்றால், அவர் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அவரைக் கூப்பிட்டு விசாரியுங்கள்” என்றார் ஆ.ராசா. தனக்காக தானே வாதாடுகிறேன் என்று கூறிக்கொண்டு அவர் நேரடியாக நீதிபதியிடம் கூறிய கூற்று இது.
அதன் பிறது, அவரது வக்கீல் சுசீல்குமார், அதே விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
இதற்கிடையே கனிமொழியின் வக்கீலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயம் பற்றி அப்போதைய அமைச்சரவைக்கு எல்லாமே தெரிந்திருந்தது என்று கொளுத்திப் போட்டார்.
அவர் தனது வாதத்தில், “அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம், மற்றும் பிரதமரின் முன்னிலையில், ராசா இதுபற்றி விலாவாரியாகவே தெரிவித்து விட்டார். ஆ.ராசா செய்தது தவறு என்றால், பிரதமரும், சிதம்பரமும் அதற்கு உடந்தையாக ஏன் இருக்கக்கூடாது?” என்ற ரீதியில் கூறத் தொடங்கினார்.
கனிமொழியும், ராசாவும் சொல்லி வைத்தால்போல சிதம்பரத்தையும், பிரதமரையும் வழக்குக்குள் இழுக்கத் தொடங்கவே, கேஸ் திரும்பப் போகின்றது என்பது விஷயம் அறிந்தவர்களுக்கு புரிந்து விட்டது. மத்திய அரசும் ஓரளவுக்கு அலர்ட் ஆகியது. ஆனால், அதற்குள் காரியங்கள், அனைவரது கைகளையும் மீறிச் செல்லத் தொடங்கிவிட்டன.
இந்த விவகாரத்தில், நிதி அமைச்சகம், பிரதமரின் அலுவலகத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று பற்றிய தகவல் ‘எப்படியோ’ லீக் ஆகியது.
அப்படியொரு கடிதம் இருக்கும் விஷயத்தை, தெரிய வேண்டியவர்களுக்கு தெரியப்படுத்தி விட்டாலே போதும். தகவல் அறியும் சட்டத்தின்படி விண்ணப்பித்து, குறிப்பிட்ட கடிதத்தை வெளியே கொண்டுவந்து விட்டார்கள். அந்தக் கடிதம், அரசியல் ரீதியாக ஒரு உலுப்பு உலுப்பிவிட்டது.
அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த ஊழல் நடக்காமல் தடுத்திருக்கலாம் என்பதுபோன்ற வார்த்தை அமைப்புகளுடன் இருந்தது, நிதி அமைச்சின் கடிதம். அது ஏற்படுத்திய பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக நிற்கின்றன.